ஏ.டி.எம்., கார்டு மாற்றி பணம் திருடிய நபர் கைது

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - சித்தூர் சாலை, கமலா தியேட்டர் அருகே பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.. மையம் உள்ளது. இங்கு, நேற்று இரவு, 7:30 மணிக்கு, ஒரு நபர் ஏ.டி.எம். இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து, பணம் திருட முயற்சித்துள்ளார்.

அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் சந்தேகம் அடைந்து, வங்கி மேலாளர் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி மேலாளர் ரகுநாத் மற்றும் போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதி திருச்சானுார் ரோடு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,47 என்பதும், இவர், ஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர் களிடம் கார்டுகளை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடி வந்ததும் தெரிய வந்தது.

ஆந்திராவில் இதுபோல் ஏ.டி.எம்., மையங்களில் கார்டு மாற்றி பணம் திருடியதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இரு மாதங்களுக்கு முன்பு திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் ஒரு பெண்ணின் ஏ.டி.எம்., கார்டை மாற்றிபயன்படுத்தி, சில ஆயிரங்களை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement