பெண்ணை மிரட்டி பணத்தை திருடிய இளைஞர் ஒரு மணி நேரத்தில் கைது

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பெரிய கட்டங்குடியைச் சேர்ந்த வேலுமணி மனைவி சாந்தி 53. இவர் பந்தல்குடி அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் 3:00 மணிக்கு டீ குடிக்க 25 வயது மதிக்கதக்க இளைஞர் பைக்கில் வந்தார். டீ குடித்து விட்டு சென்றவர் மீண்டும் கடைக்கு வந்து சர்பத் போடும்படி கூறியுள்ளார். சாந்தி சர்பத் போட உள்ளே சென்றபோது, அந்த இளைஞர் சாந்தி கழுத்தில் கத்திரிக்கோலால் வாயை பொத்தி தாக்கியதுடன் பணத்தை தரும்படி மிரட்டியுள்ளார். இதில் சாந்தி கழுத்தில் வெட்டு விழுந்தது. பிறகு சாந்தியை தள்ளிவிட்டு கல்லாவிலிருந்த ரூ.1000 ஐ எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பினார். சாந்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பந்தல்குடி போலீசார் விசாரித்தனர்.

ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதில் ஈடுபட்டது அருப்புக்கோட்டை அருகே சூர நாயக்கன்பட்டி கவுதம் 19, என தெரிய வந்தது. இளைஞரை ஊரில் வைத்து ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்து விசாரித்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மது அருந்த பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து ரூ.1200 மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement