பெற்றோரை மீறி திருமணம் செய்வோர் போலீஸ் பாதுகாப்பு கோர முடியாது: அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

10

பிரயாக்ராஜ்: 'பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்யும் தம்பதிகள், போலீஸ் பாதுகாப்பை கட்டாய உரிமையாகக் கோர முடியாது' என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.


உ.பி., யின் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயா கேசர்வாணி என்ற பெண், பெற்றோர் விருப்பத்தை மீறி காதலரை திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மாவட்ட எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.

போலீசார் மறுப்பு



ஆனால், அவருக்கும், அவரது கணவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுத்தனர். இதையடுத்து, அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ரேயா வழக்கு தொடர்ந்தார். அவரது 'ரிட்' மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் ஸ்ரீவஸ்தவா, 'உண்மையிலேயே அச்சுறுத்தல் எதுவும் இல்லாமல், பாதுகாப்பு வழங்கும்படி கோர முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது: பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்யும் காதலர்கள், தங்களுடைய பாதுகாப்புக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் எதுவும் இல்லாத சூழலில், போலீஸ் பாதுகாப்பை, ஒரு உரிமையாகக் கேட்க முடியாது. தகுதியான வழக்காக இருந்தால் மட்டுமே, ஒரு தம்பதிக்கு நீதிமன்றம் பாதுகாப்பை வழங்க முடியும்.


எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அதுபோன்ற தம்பதிகள், ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருந்துகொண்டு, இந்த சமூகத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

அவசியம் இல்லை



ஏற்கனவே, உ.பி.,யைச் சேர்ந்த லதா சிங் என்பவரின் வழக்கில் இதேபோன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், திருமணம் செய்வதற்காக ஓடிப்போகும் இளைஞர்களுக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.


இந்த வழக்கில், இருவரின் உறவினர்கள் யாரேனும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ இவர்களை தாக்க வாய்ப்புள்ளது என்பதற்கு துளிகூட ஆதாரம் இல்லை. ஒருவேளை உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கண்டறிந்தால், போலீசாரே சட்டப்படி தேவையான பாதுகாப்பை அளிப்பார்கள்.


மனுதாரரும், சித்திரகூட் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார். இந்த சூழலில், அவரிடம் யாரேனும் தவறாக நடந்தாலோ, துன்புறுத்தினாலோ, போலீசார் காப்பாற்ற முன்வருவர். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement