காலி மனைகளுக்கு நிலுவை வரி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் காலி வீட்டு மனைகளுக்கு வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு சொத்தின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு வரி செலுத்தி வருகின்றனர். காலி வீட்டு மனைகளுக்கும் வரி செலுத்துவது கட்டாயம் என்பதால் ஒரு சிலர் மட்டும் வரி செலுத்துகின்றனர்.

பல இடங்களில் வீட்டு மனைகளை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதில், மனைகள் வாங்கியவர்களில் பலர் வீடுகள் கட்டாமல் பல ஆண்டுகளாக காலி மனையாகவே வைத்துள்ளனர். இவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலி மனை வரியை செலுத்தாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், 'காலி மனைக்கு வரி கட்டுவது கட்டாயமாகும். இதற்காக நகரின் பல இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளோம். காலி மனை வைத்துள்ளவர்கள் உடனடியாக காலி மனைக்கான வரி செலுத்த வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement