பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற நுகர்வோர் சங்கம் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றிட நுகர்வோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவில் பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி சரவணன்; சின்னசேலம் - நளினி; வாணாபுரம் - அண்ணாமலை; சங்கராபுரம் - சேகர்; கல்வராயன்மலை-செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நுகர்வோர் அமைப்புகள் சார்பில், கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முத்திரைத்தாள், ஸ்டாம்ப் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்தும் முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆர்.டி.ஓ., உறுதியளித்தார். இதில் மின்சாரம், நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் மிஸ்சிங்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தனி தாசில்தார்கள் தவிர, பிற துறை சார்ந்த அதிகாரிகள் யாருமே பங்கேற்கவில்லை. பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறைகளை சேர்ந்த ஓரிரு இளநிலை உதவியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிகாரிகள் பங்கேற்றால் மட்டுமே, நுகர்வோர் கோரிக்கைகளுக்கு உறுதியான நடவடிக்கை இருக்கும். தற்போது, ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த இந்த கூட்டம் வெறும் கண்துடைப்பாக நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கு பெறுவதை உறுதி செய்யவும், நுகர்வோர் வலியுறுத்தினர்.

Advertisement