மக்களுக்கு வழங்காமல் அறையில் வீணாகும் வேட்டி, சேலைகள்

காரைக்குடி : காரைக்குடி தாலுகா அலுவலகத்தில், வேட்டி சேலைகள் மக்களுக்கு வழங்காமல் அறையில் மூடையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி தாலுகாவில் உள்ள 143 ரேஷன் கடைகள் மூலம் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டது.

காரைக்குடியில் உள்ள பல ரேஷன் கடைகளில் வேட்டி சேலைகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வேட்டி சேலைகள் மூடைகளாக கட்டப்பட்டு வீணாகி வருகிறது.

அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் போது ஆலங்குடியார் வீதி 1 மற்றும் ஆலங்குடியார் வீதி 2, சந்தைப்பேட்டை 2 உட்பட பல்வேறு ரேஷன் கடைகளிலும் சேலை அல்லது வேட்டி மட்டுமே வழங்குவதாக மக்கள் புகார் கூறினர்.

ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதி பேருக்கு கிடைத்தது.

ஆனால் இதுவரை, ஆலங்குடியால் வீதி கடை எண் 1, கருணாநிதி நகர் முதல் வீதி ரேஷன் கடையில் முழுமையாக வேட்டி சேலை வழங்கப்படவில்லை. தற்போது வரை கேட்டாலும் எந்த பதிலும் இல்லை.

அதிகாரிகள் கூறுகையில்: பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை முறையாக வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய சேலை வேட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement