பெங்., - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடம்; அமைச்சரவை துணை குழு அமைத்தது அரசு

பெங்களூரு : பெங்களூரு - மைசூரு இடையே உள்கட்டமைப்பு வழித்தடம் தொடர்பாக, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, அமைச்சரவை துணை குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

பெங்களூரு - மைசூரு இடையிலான 111 கி.மீ., நீளத்திற்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வழித்தடம் அமைக்க, 1997ல் கர்நாடக அரசு - நைஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

'இந்த திட்டத்திற்கு அரசு 20,193 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற செலவுகளை நைஸ் நிறுவனம் ஏற்க வேண்டும்' என, ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தபடி அரசு சார்பில் தற்போது வரை, கணிசமான அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தியதில் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் 374 வழக்குகளும் உள்ளன.

உள்கட்டமைப்பு வழித்தடத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை பணிகள் நடக்கவில்லை.

இதற்கிடையில் 2018ல் பெங்களூரு - மைசூரு இடையில் எக்ஸ்பிரஸ் வே சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் முடிந்தன. தற்போது அந்த சாலையில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் இரு நகரங்கள் இடையே, தற்போது உள்கட்டமைப்பு வழித்தடம் தேவையா என்றும் கேள்வி எழுந்தது.

இதுபற்றி கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உரிய முடிவு எடுக்க அமைச்சரவை துணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்துறை பரமேஸ்வர் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைத்து, அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், முனியப்பா, எம்.பி.பாட்டீல், மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உள்கட்டமைப்பு வழித்தடம் தொடர்பாக, எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement