பழைய தாலுகா அலுவலக கட்டடம் பயன்பாட்டிற்கு வர வேண்டும்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம் தாலுகா அலுவலக கட்டடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, தாலுகா அலுவலகம் என பல அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தன. இதில் தாலுகா அலுவலகத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டு தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டு செயல்படுகிறது.

இந்நிலையில் பழைய தாலுகா அலுவலக கட்டடத்தை சிறைத்துறை, அரசு மருத்துவமனை, நூலகம் உள்ளிட்ட பல துறைகள் தங்களுக்கு ஒதுக்க கேட்டு வருகின்றன. வருவாய் நிர்வாகம் எந்தவித முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.

பழமையான கட்டடத்தை புராதான சின்னமாக கையாள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் ஏதேனும் ஒரு துறைக்கு ஒதுக்கீடு செய்து, பயனற்ற நிலையில் உள்ள கட்டடத்தை பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நூலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே நூலகத்திற்கு ஒதுக்கினால் அரசிற்கு செலவும் குறையும், நுாலகத்திற்கு தனி கட்டடம் என்கின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement