பாம்பு கடி 'அறிவிக்க கூடிய நோய்' என அரசாணை வெளியிட்டும் பயனில்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயங்கும் நிலை

கம்பம் : 'அறிவிக்க கூடிய நோய்' என பாம்பு கடியை அறிவித்தும் டாக்டர்கள் சிகிச்சையளிக்க தயங்குவதால் பலர் பலியாவதாக', சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

பாம்பு கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷ முறிவு ஊசி, மருந்துகள் போதிய அளவு இருந்த போதும் , உயிர் பலி எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு பாம்பு கடியை 'அறிவிக்க கூடிய நோய்' ( Notifiable Disease ) என்று கடந்தாண்டு அறிவித்து அரசாணை வெளியிட்டது.

அறிவிக்க கூடிய நோய் என தமிழக அரசு அறிவித்து பாம்பு கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் பாம்பு கடி சிசிச்சையளித்த விபரங்களை தொகுத்துள்ளது.

இதில் சிகிச்சைக்கு வந்தவர்கள், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்களா அல்லது உயிரிழந்தார்களா, எத்தனை பேர் இறந்தனர், கடித்தது என்ன வகையான பாம்பு, விஷத்தின் தன்மை, விஷ முறிவு ஊசி மருந்து செலுத்தப்பட்டதா, சிகிச்சைக்கு வந்தவரின் வயது, அவர் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

வரும் காலங்களில் பாம்பு கடி சிகிச்சை மேற்கொள்ளும் முறை மற்றும் பொதுமக்கள் பாம்பு கடியை தவிர்க்கும் வழிமுறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், அறிவிக்க கூடிய நோய் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி பாம்பு கடி சிகிச்சை சிறப்பு கவனிப்பிற்கு உள்ளாகும். டெங்கு காய்ச்சல் அறிவிக்க கூடிய நோய் பட்டியலில் உள்ளது. அதே போன்று பாம்பு கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை முறைகளை மேம்படுத்த அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றனர். ஆனால் அறிவிப்பு வெளியிட்டு 5 மாதங்களை கடந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து உயிர் பலியாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்க அச்சப்படும் நிலை டாக்டர்களிடம் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement