கான்ட்ராக்டர்களிடம் 10 சதவீத கமிஷன்; துணை முதல்வர் மீது பா.ஜ., பாய்ச்சல்

பெங்களூரு: அரசு பணிகளை டெண்டர் வழங்க, கான்ட்ராக்டர்களிடம் இருந்து 10 முதல் 15 சதவீதம் கமிஷன் வாங்குவதாக, துணை முதல்வர் சிவகுமார் மீது ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றஞ்சாட்டினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரு நகர அமைச்சராக இரண்டு ஆண்டுகளில், துணை முதல்வர் சிவகுமார் செய்த பணிகள் என்ன? பொது இடத்தில் அவருடன் விவாதம் நடத்த நான் தயார். 'ஒயிட் டாப்பிங்' பணிகளை துவக்கி வைப்பதாக கூறி, புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுக்கிறார். பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்ப்பது இல்லை.

சுரங்கப்பாதை அமைக்க போவதாக சிவகுமார் கூறுகிறார். நகரில் பல இடங்களில் மேம்பாலப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவர்களால் ஒருபோதும் சுரங்கப்பாதை அமைக்க முடியாது.

கவர்னரிடம் புகார் அளித்ததால் என் மீது சிவகுமார் வெறுப்பு காட்டுகிறார். நம் நாட்டில் அனைவருக்கும் புகார் அளிக்கும் உரிமை உண்டு.

இயற்கை பேரிடர் பெயரில் உலக வங்கியில் இருந்து 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளீர்கள். ஆனால் பெங்களூரில் இதுவரை எந்த பேரிடரும் ஏற்படவில்லை.

பெங்களூரில் நடக்கும் பணிகளுக்கு ஆந்திர கான்ட்ராக்டர்களுக்கு டெண்டர் கொடுப்பதாக நான் கூறிய குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது. அரசு பணிகளை டெண்டர் வழங்க, கான்ட்ராக்டர்களிடம் இருந்து 10 முதல் 15 சதவீதம் கமிஷன் சிவகுமார் வாங்குகிறார்.

பில்கேட்ஸ், அதானி, அம்பானியிடம் இல்லாத அதிர்ஷ்டம் கூட சிவகுமாருக்கு உள்ளது. என் மீது பொய் பலாத்கார வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார்.

எனக்கு எதிராக செய்த பாவத்தை, வேறு யாருக்கும் செய்ய வேண்டாம். என்னை கொல்வதன் மூலம் சிவகுமார் என்ன சாதிக்க போகிறார்? என் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த முதல், கடைசி நபர் நான் தான்.

சிவகுமாருக்கு 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. ஆனால் அவருடன் 40 எம்.எல்.ஏ.,க்கள் கூட இல்லை. அற்பமான எண்ணங்களை ஒதுக்கி வையுங்கள். என் மீது ஏன் இந்த வெறுப்பு? வெறுப்பு அரசியல் தேவையா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement