முதல்வர் பதவிக்காக அணி மாறும் நிதிஷ்குமார்; காங். விமர்சனம்

பக்சர்: பீகாரில் முதல்வர் பதவிக்காக மட்டுமே நிதிஷ்குமார் அணி மாறுகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலம் பக்சரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு பேசியதாவது;
நிதிஷ்குமாருக்கும், பா.ஜ.வுக்கும் இடையிலான கூட்டணி சந்தர்ப்பவாதம் கொண்டது. இந்த கூட்டணி மக்களுக்கு நல்லதல்ல. முதல்வர் பதவிக்காக மட்டுமே நிதிஷ்குமார் அணி மாறுகிறார்.
பீகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடியிலான நிதி தொகுப்பு பற்றி 2015ம் ஆண்டு ஆக.18ம் தேதி அளித்த பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் நிதிஷிடம் கேட்க வேண்டும். இந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
காங்கிரசை குறி வைத்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
