கழிவுநீர் கிணற்றால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திணையாம்பூண்டி ஊராட்சியில், பெரிய ஆண்டித்தாங்கள், நெமிலிபட்டு, சின்ன ஆண்டித்தாங்கள், முருக்கேரி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், முருக்கேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி சேவை மையம் அருகே, சில ஆண்டுக்கு முன் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கழிப்பறையின் கழிவுநீரை சேகரிக்க, அப்பகுதியில் கழிவுநீர் கிணறு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கழிவுநீர் கிணறு முறையாக பராமரிப்பு இல்லாமல், கிணற்றின் ஒரு பகுதி சிலாப் இன்றி திறந்த நிலையில் உள்ளது.

இதனால், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வரும், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள், அடிக்கடி கழிவுநீர் கிணற்றின் அருகே விளையாடி வருகின்றனர்.

அவ்வாறு விளையாடும்போது குழந்தைகள் எதிர்பாராதவிதமாக, திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கிணற்றை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement