பா.ஜ., பிரமுகர் வீட்டில் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பட்டப்பகலில் பா.ஜ., பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி தங்கம், 45; பா.ஜ., தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர். நேற்று காலை 6:00 மணிக்கு ஏழுமலை வீட்டில் இருந்து வெளியே சென்று 7:30 மணிக்கு திரும்பினார்.
வீட்டிற்குள் மனைவி, குழந்தைகள் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய், 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், விக்கிரவண்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
போலீஸ் திணறல்
விக்கிரவாண்டி சுற்று வட்டார பகுதியில், கடந்த 3 மாதங்களாக வீட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாரத்தில் 2 இடங்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகிறது.
போலீசார் முறையான ரோந்து பணி இல்லாததால், கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். தற்போது பட்டப் பகலிலே வீடு புகுந்து திருடும் சம்பவங்களால் விக்கிவராண்டி சுற்றுப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.