அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே ஜானகிபுரத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, 50; விவசாயி.
இவர் நேற்று, வழக்கம் போல் தன் நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து, கீழே நிலத்தில் விழுந்து கிடந்துள்ளது.
இதை கவனிக்காத வேலு, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காலையில் சென்ற வேலு வெகுநேரம் ஆகியும் திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடி விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், வேலுவின் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.