கூட்டணி அமைப்பது தொடர்பாக உத்தவ் - ராஜ் தாக்கரே பேச்சு

மும்பை:“உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இடையே உருக்கமான பேச்சு நடந்து வருகிறது,” என, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
மஹாராஷ்டிரா அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக சிவசேனா விளங்குகிறது. கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே, தன் மகனான உத்தவ் தாக்கரேவுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
பால் தாக்கரேவின் இளைய சகோதரர் மகனான ராஜ் தாக்கரே இதனால் அதிருப்தி அடைந்தார். கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தும், அது அங்கீகரிக்கப்படவில்லை என்ற கோபத்தில் சிவசேனாவில் இருந்து விலகினார்.
மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா என்ற தனிக் கட்சியை, 2006ல் துவக்கினார் ராஜ் தாக்கரே. கடந்த 19 ஆண்டுகளாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே எதிரெதிர் அரசியல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில், மஹாராஷ்டிரா நலனுக்காகவும், மராத்தியர் கவுரவத்தை காக்கவும், இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே கூறினார். உத்தவ் தாக்கரேவும் இதே கருத்தை தெரிவித்தார்.
அதனால், இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கப் போகின்றனவா அல்லது கட்சிகள் இணையப் போகின்றனவா என, பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளன.
“இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால், கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை.
''இணைந்து செயலாற்றுவது தொடர்பாக, இருவருக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான பேச்சு நடந்து வருகிறது,” என, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று கூறினார்.
கடந்த 2022ல் சிவசேனா ஆட்சியின்போது, முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பலர் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தரப்பே உண்மையான சிவசேனா என்று அறிவிக்கப்பட்டது. முதல்வராக இருந்த ஷிண்டே தற்போது துணை முதல்வராக உள்ளார்.வழக்கமாக, நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் கோபப்பட மாட்டார். ஆனால், சதாரா மாவட்டத்தில் நேற்று ஷிண்டேயிடம், உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே இணைவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கோபமடைந்த ஷிண்டே, 'அரசின் நிர்வாகம் குறித்து மட்டுமே கேளுங்கள்' என ஆவேசமாக கூறினார்.
மேலும்
-
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'ஆட்டோ பிரீபெய்டு' திட்டம் தொய்வு
-
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!
-
கணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய மனைவி
-
கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., படுகொலை; மனைவி கைது
-
அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்கொடி