அழிவின் விளிம்பில் பனைமரங்கள் பொ.ப.துறை முயற்சி எடுக்குமா?

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் குளம், குட்டை, ஓடை, ஏரி என, 4,500க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வரை, மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பனை மரங்கள் இருந்தன.
தற்போது, 60,000 - 80,000 வரையிலான பனை மரங்கள் உள்ளன. 20 ஆண்டுகளில் 20,000 பனை மரங்கள் வரை அழிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் வாழ்வோடும், வளத்தோடும் பனை மரம் ஒன்றியது. விவசாய நிலங்களின் வரப்பு, ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற பகுதிகளில் கரைகளை பலப்படுத்தவும், மண் அரிப்புகளை தடுக்கவும், பனை மரங்களை வளர்ப்பதை தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டிருந்தனர்.
அதன்படி, ஒவ்வொரு ஏரிக்கரைகளிலும், குறைந்தது 50 முதல் 200க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்தனர். அது நல்ல பலனை அளித்து வந்தது. தற்போதும் கரைகளில் பனை மரங்களை காண முடிகிறது.
ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் செங்கல் சூளை அமைக்க, நிலத்தை விற்பனை செய்ய என, நன்கு வளர்ந்த பனை மரங்கள் அழிக்கப்பட்டன. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இதை அரசு முறையாக கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருவாலங்காடு சேர்ந்த இயற்கை ஆர்வலர் டி.தயாநிதி கூறியதாவது:
திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் ஏரிக்கரைகளில் உள்ள பனை மரங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அழிந்து வருகின்றன. குறிப்பாக மருதவல்லிபுரம், மணவூர், பெரியகளக்காட்டூர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்துள்ளன.
பல மரங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ளன. ஒன்றியம் மட்டுமின்றி, மாவட்டம் முழுதும் பனை மரங்களின் நிலை இது தான். எனவே, ஏரிக்கரைகளில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கிராமங்களில் குளத்தின் கரையிலுள்ள பனைமரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும். கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் பனைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'ஆட்டோ பிரீபெய்டு' திட்டம் தொய்வு
-
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!
-
கணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய மனைவி
-
கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., படுகொலை; மனைவி கைது
-
அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்கொடி