பள்ளிப்பட்டு பஸ் நிலையம் மேம்படுத்துவது எப்போது?

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரின் வடமேற்கில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை துவங்குகிறது. ஆந்திர மாநிலம், சித்துாரில் இருந்து கார்வேட்நகரம் வழியாக புத்துார், திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகள், பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.

பள்ளிப்பட்டு அருகே உள்ள ஆந்திர மாநில குக்கிராமங்களை சேர்ந்தவர்கள், தினமும் அத்தியாவசிய தேவைகளுக்காக, பள்ளிப்பட்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால், அதிகாலை முதல் இரவு 10:00 மணி வரை, பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும். இங்கிருந்து, ஆயிரக்கணக்கான பயணியர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையத்தில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனித்தனியே நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாமல், பேருந்து நிலைய நுழைாயிலை மறைத்தபடி நிறுத்தப்படுகின்றன.

மேலும், பேருந்து நிலையத்தின் மீடியனை ஒட்டி, ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. நடைபாதை கடைகளும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் உயரமான மேற்கூரையுடன் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதேபோல், பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement