சோதனைச்சாவடி அருகே துணிகரம் வீட்டில் 17.5 சவரன், பணம் திருட்டு

திருப்பூர் : காங்கயம், நத்தக்காடையூர், வேலன் நகரைச் சேர்ந்தவர் தங்கராசு, 45. தனியார் நிறுவன மேலாளர். மனைவியுடன் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அவல்பூந்துறையில் உள்ள தங்கை வீட்டுக்குச் சென்றார்.

மீண்டும் பகல் 12:00 மணியளவில் வந்து பார்த்த போது, வீட்டின் முன்புறக் கதவு பூட்டு உடைத்து திறந்து கிடந்தது.

பீரோ உடைக்கப்பட்டு, மொத்தம் 17.5 பவுன் நகைகளும், 1.20 லட்சம் ரூபாயும் திருடப்பட்டது தெரிந்தது.

காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். சுற்றுப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே தான் போலீசார் சோதனைச் சாவடியும் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான பகுதியில், பட்டப் பகலில் சில மணி நேரத்துக்குள் நடந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஈடுபட்ட கும்பல் ஒரு காரில் வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடக்கிறது.

Advertisement