ஐ.ஏ.எஸ்., அதிகாரி இப்படி பொய் சொல்லலாமா? ஐகோர்ட் நீதிபதி நேரடி எச்சரிக்கை

சென்னை : 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொய் பேசலாமா' என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி மெர்லின் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விபரம்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரியில், 2007ல் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அங்கீகரிக்கப்பட்ட என் பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு கல்லுாரி நிர்வாகம் 2008ல் கடிதம் அனுப்பியது.
பின், பல முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பியது. இறுதியாக, 2021 டிசம்பர், 5ல் என் பணி நியமனத்துக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார். எனினும், 2007 முதல் எனக்கு ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை வழங்கவில்லை. இதைக்கேட்டு, இணை இயக்குநருக்கு மனு அளிக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், 'இந்த பணி நியமனத்துக்கு உயர் கல்வித்துறை செயலரிடம், மேலும் ஓர் ஒப்புதல் பெற வேண்டும்' என்று, 2022ல் உத்தரவு பிறப்பித்தார்.
ரத்து செய்தது
இதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இணை இயக்குநரின் உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், 2007 முதல் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் கணக்கிட்டு, நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று, கடந்தாண்டு மார்ச், 25ல் உத்தரவிட்டது. எனினும், இதுவரை எனக்கு ஊதியம் வழங்கவில்லை.
எனவே, உத்தரவை அவமதித்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால் நேரில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி, 'இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. அவமதிப்பு வழக்கும் நான்கு முறை விசாரணைக்கு வந்து விட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. அதேநேரம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆஜராகி உள்ளார்.
'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் எதற்காக ஆஜராக வேண்டும்? ஒருமுறை ஆஜரானால், மறுமுறை ஆஜராக தேவையில்லை. இந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறீர்களா?' என, கேள்வி எழுப்பினார்.
தள்ளிவைப்பு
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'தற்போது உயர் கல்வி செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபால் இல்லை. வேறொரு அதிகாரி உள்ளார்' என்றார். அதற்கு, மனுதாரர் தரப்பில், 'வழக்கு தொடரும் போது, இவர் தான் செயலராக இருந்தார்' என்றார்.
அதை கேட்ட நீதிபதி, 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொய் சொல்லலாமா? வழக்கு தொடரும் போது, அந்த பதவியை வகித்து உள்ளீர்கள். ஓராண்டு கடந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துள்ளீர்கள். 'எனவே, இந்த அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப் போகிறேன்' என்று எச்சரித்தார்.
உடன் அரசு தரப்பில் வழக்கறிஞர், 'மனுதாரரின் ஊதியத்தை கணக்கிட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம். 'அடுத்த விசாரணைக்குள் அரசிடம் இருந்து உரிய பதிலை பெற்று தெரிவிக்கப்படும்' என்றார். அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு