எழுத்தின் மேன்மை எழுத்தாளரிடம் இல்லாவிட்டால் காலம் புறக்கணிக்கும்: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு

சென்னை : ''எழுத்தின் மேன்மை, அதை எழுதிய எழுத்தாளரிடம் இல்லாவிட்டால், அந்த எழுத்தை காலம் புறக்கணிக்கும்,'' என, ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசினார்.
எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், ராணி மைந்தன் எழுதிய நுால்களின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் எழுதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பித்த, 'விசாலப்பார்வை' நுாலை, நல்லி குப்புசாமி வெளியிட, வானதி ராமு பெற்றுக்கொண்டார்.
ராணிமைந்தன் எழுதி, வானதி பதிப்பகம் பதிப்பித்த, 'எழுத்து - சேவை - என்.சி.எம்' நுாலை, தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலை வேந்தர் ஸ்ரீனிவாசன் வெளியிட தபம்ஸ் பா.மேகநாதன் பெற்றுக்கொண்டார்.
எழுத்து - சேவை - என்.சி.எம்., நுால் குறித்து, இறையன்பு பேசியதாவது:
எந்த நிறுவனத்துக்கும் ஒரு தொலைநோக்கு பார்வையும், இயக்கப் பார்வையும் இருக்க வேண்டும். அது, எழுத்துக்கும் இருக்க வேண்டும். சில படைப்புகள் சிறப்பானதாக இருக்கும். அதை படைத்த படைப்பாளி சிறப்புக்குரியவராக இருக்க மாட்டார். அப்படிப்பட்ட படைப்புகளை காலம் புறக்கணித்து விடும்.
அவ்வாறில்லாமல், தன் எழுத்தை போலவே, சமூகத்துக்கான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்.சி.மோகன்தாஸ். அதற்கு வாழும் எடுத்துக்காட்டாக, அவரின் பெற்றோர் இருந்துள்ளனர். இதுதான், அவர் எழுத்தாலும், வாழ்வாலும் அவர் சொல்லும் செய்தி.
இவ்வாறு அவர் பேசினார்.
'விசாலப்பார்வை' நுால் குறித்து, மணிமேகலை பிரசுரம் ஆசிரியர் குழு தலைவர், லேனா தமிழ்வாணன் பேசியதாவது:
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், கடைசியாக பேசுபவருக்கு, நான்கு முக்கிய சிக்கல்கள் வரும். அதாவது, பேசுபவருக்கு நேரம் இருக்காது; கேட்பவருக்கு சுவாரஸ்யம் இருக்காது; கேட்பதற்கு கூட்டம் இருக்காது; அப்படியே இருந்தாலும், பேசுபவருக்கு விஷயம் இருக்காது' அப்படிப்பட்ட நிலையில் நான் உள்ளேன்.
நான் பல எழுத்தாளர்களை இனம் கண்டுள்ளேன். அதில் ஒருவர், 'வாரமலர்' அந்துமணி. அவர், ஊடகத்துறை சார்ந்த முதுகலை பட்டம் படித்த, நல்ல இதழாளர். சிறந்த நிர்வாகி.
இதை அறிந்த நான், அவரை எழுதும்படி வற்புறுத்தினேன். அவர் என்ன எழுதுவது என்றார். நான் சிறு சிறு கேள்வி பதில்களை எழுதும்படி ஊக்கப்படுத்தினேன். பின், நான் மிகவும் பொறாமைப்படும் அளவுக்கு, அந்துமணி பதில்களையும், 'பா.கே.ப.,'வையும் எழுதினார்.
அப்படிப்பட்டவர் தான், என்.சி.மோகன்தாசின் திறமையை கண்டறிந்து, முதலில், 'இனியவளே' என்ற தொடரை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார். இவர், வெளிநாட்டில் செய்த சேவைகள், தற்போது எழுதும் எழுத்துக்கள் அனைத்துக்கும், அவர் ஊக்க சக்தியாக உள்ளார்.
அவர் பெயரை சொன்னால், இவர் பவ்யமாகி விடுவார். அப்படிப்பட்ட குரு - சிஷ்யன் உறவு. அதனால் தான், இந்த நுால்கள் சிறப்பாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் ஸ்ரீகாந்த் கருணேஷ், கவிஞர் சக்திமான் அசோகன், பட்டிமன்ற பேச்சாளர் அரங்க நெடுமாறன், சாஸ்திரி பவுண்டேஷன் நிறுவனர் ஜெ.பாலசுப்ரமணியன்.
நாடக இயக்குநர் சி.வி.சந்திரமோகன், இந்தியன் பிரண்ட் லைனர் டிரஸ்ட் செந்தில்குமார் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர் நுாருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு