மக்களை ஈர்க்கும் 'சென்ட்ரலைஸ்டு வேக்யூம் கிளீனர்'

கோவை : 'கொடிசியா' சார்பில், 'பில்டு இன்டெக்- 2025' கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.

இதில், வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் சென்ட்ரலைஸ்டு வேக்யூம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கமாக, வீடு சுத்தம் செய்ய, வேக்யூம் கிளீனர் பயன்படுத்துவோம். அவற்றை வீடு முழுதும் இழுத்துச் செல்ல வேண்டும்.

சிறிய ரக ரோபோட்டிக் வேக்யூம் கிளீனர்களை விட கூடுதல் சுத்தம் தேவைப்படுவோருக்கு, இந்த சென்ட்ரலைஸ்டு வேக்யூம் கிளீனர் உதவும்.

கண்காட்சியில், திருப்பூரைச் சேர்ந்த 'பிடோ ஆடியோவிஷன்' நிறுவனம் சார்பில், இந்த இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது, வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும், குழாய் இணைப்பும், அதில் இருந்து ஒரு இன்லெட்டும் தரப்பட்டிருக்கும்.

அந்த அறையை சுத்தம் செய்ய, குறிப்பிட்ட இன்லெட்டில் டியூபைச் சொருகி, சுத்தம் செய்து கொள்ளலாம். வெட், டிரை என இரு வகைகளிலும் சுத்தம் செய்யலாம். பாத்திரம் கழுவுமிடம், காய்கறி கழிவு என ஈரக் கழிவுகளையும் முழுமையாக சுத்தம் செய்யும்.

வழக்கமாக சுத்தம் செய்யும் போது எழும், மிகச்சிறு துாசி துகள்கள் காற்றில் பறக்காது. உறிஞ்சப்படும் குப்பை, வெளியில் சேகரமாகும். இதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளலாம்.

இதில், 'செல்ப் பிளஸ்' மாடலில், வெளியில் உள்ள டேங்கையும் சுத்தம் செய்ய தேவையில்லை. அதுவே சுத்திகரித்து, குப்பையை நீர்போல் மாற்றி, சாக்கடையில் தள்ளி விடும்.

வீட்டின் அளவை பொறுத்து, வெவ்வேறு திறன் கொண்ட மாடல்களை தருகின்றனர். 4,000 சதுரடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு உகந்தது.

அதற்கு கீழ் உள்ள வீடுகளுக்கு, ஸ்டாண்டர்டு வகை வேக்யூம் பரிந்துரை செய்கின்றனர். வீட்டுக்கு மட்டுமல்லாது, வர்த்தக பயன்பாட்டுக்கும் உள்ளது.

இந்த வேக்யூமை வைத்து, காரையும் சுத்தம் செய்யலாம். தண்ணீருக்கான இன்லெட் இருந்தால் போதும்.

இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள், பில்டு இன்டெக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

Advertisement