ஆன்லைனில் ரூ.31.37 லட்சம் மோசடி; இலங்கை தமிழர் உட்பட 2 பேர் கைது

சென்னை : விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், போலி செயலி வாயிலாக பங்கு சந்தை முதலீடு ஆசை காட்டியும், இரண்டு சம்பவங்களில், 31.37 லட்சம் ரூபாய் மோசடி செய்த, இலங்கை தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில், வேலை வாங்கி தருவதாக மர்ம நபர், 'பேஸ்புக்'கில் தொடர்பு எண்களுடன் விளம்பரம் செய்துள்ளார். அந்த எண்களுக்கு மதுரையை சேர்ந்த நபர் தொடர்பு கொண்டு, மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.58 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.
அதன்பின், மர்ம நபர் தொடர்பை துண்டித்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர், 1930 என்ற எண்ணில், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்திற்கு புகார் அளித்துள்ளார்.
அதேபோல, திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், பங்கு சந்தை முதலீடு குறித்து போலி செயலி வாயிலாக ஆசை காட்டி, 25.79 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இவ்விரண்டு சம்பவங்கள் குறித்து விசாரிக்க, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், தனிப்படை அமைத்தார்.
இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து, சேலம் மாவட்டம் தாரமங்கலம், சிக்கம்பட்டியை சேர்ந்த பிரகாஷ், 32 என்பவரை கைது செய்தனர். இவர், அப்பகுதியில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்துள்ளார்.
அந்த அனுபவத்தில் வேலை வாங்கி தருவதாக, 'பேஸ்புக்'கில் விளம்பரம் செய்து, பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது, தாரமங்கலம் போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள், 10 சிம்கார்டுகள், ஒன்பது ஏ.டி.எம்., கார்டுகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபரிடம், அதே மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த தினுாஷன், 33, பங்கு சந்தை தொடர்பான போலி செயலி வாயிலாக, 25.79 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இலங்கை தமிழரான அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கு, நாடு முழுதும், 25 மோசடி வழக்கில், சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு