மரங்கள் வளர்ப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம்

பந்தலுார் : 'மரக்கன்றுகள் நடுவதில் மக்களின் பங்களிப்பு இருந்தால், இயற்கையை பாதுகாக்க முடியும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி வளாகங்களில், நீதித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நீதிமன்ற பணியாளர் ஷாலினி வரவேற்றார்.
நீதிபதி சிவக்குமார் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''சமீப காலமாக இயற்கை தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மரங்கள் அடர்த்தியாக உள்ள தோட்டங்கள் தற்போது கட்டட காடுகளாக மாறி வருவதால், வெப்பத்தின் தன்மை அதிகரித்து, நச்சு புகையை துாய்மைப்படுத்த வழி இல்லாமல் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. மேலும், இயற்கை மாற்றத்தால் கால நிலையில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாவதுடன், தண்ணீருக்காக போராடும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த நிலை மாற பொதுமக்கள் மரக்கன்றுகளை நடவு செய்து, இயற்கையை பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா, டி.எஸ்.பி., ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர். வனச்சரகர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.