லாரி - வேன் மோதல்: கடலுாாில் 10 பேர் காயம்

கடலுார் : கடலுார் அருகே தண்ணீர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

சென்னை, திருவள்ளூரை சேர்ந்தவர் மணிகண்டன்,25; தனியார் கல்லுாரியில் பகுதி நேர இன்ஜினியரிங் படிக்கிறார். இவர், நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தில் நடந்த நண்பர் திருமண விழாவிற்காக, சக மாணவர்களுடன் வேனில் சென்றனர்.

விழா முடிந்து நேற்று மாலை மீண்டும் சென்னை புறப்பட்டனர். வேனை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன்,30; ஓட்டினார். கடலுார், முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் அருகே 5:00 மணிக்கு வந்தபோது, நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்னால் வேன் மோதியது.

இதில், டிரைவர் லோகேஸ்வரன் மற்றும் வேனில் பயணித்த நாகப்பட்டினம் சூர்யா,25; , கேரளாவை சேர்ந்த விசாக்,25; கிருஷ்ணா,28; மயிலாடுதுறை சுபாஷ்,26; உட்பட 10 பேர் காயமடைந்தனர். முதுநகர் போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement