பழங்குடியினரின் மெழுகு சிலை வியப்புடன் கண்டு களித்த மக்கள்

ஊட்டி : ஊட்டி முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில், வைக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் மெழுகு சிலையை பொதுமக்கள் வியப்புடன் கண்டுக்களித்தனர்.
ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்றுகள் நடவு திட்ட துவக்க விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் உட்பட ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
இங்குள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் பகுதியில், மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களான, குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர், கோத்தர் மற்றும் தோடர் மக்களின் பாரம்பரிய கலாசாரத்தை போற்றும் வகையில், மெழுகாலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
மிகவும் தத்ரூபமாக வைக்கப்பட்ட சிலைகளை, முகாமில் பங்கேற்ற அனைவரும் வியப்புடன் கண்டுகளித்தனர்.