ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு நிழல் உலக தாதாக்களுக்கு தொடர்பு?

பெங்களூரு: ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் நிழல் உலக தாதாக்களுக்கு தொடர்பு உள்ளதா என்று, பெங்களூரு சி.சி.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராய், 35. நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு, ராம்நகரின் பிடதி பண்ணை வீட்டில் இருந்து, பெங்களூருக்கு காரில் புறப்பட்டார். கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். காரின் கதவில் முட்டியதில், ரிக்கி ராய் மூக்கு உடைந்தது.

பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலம் தேறி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, ராம்நகர் டி.எஸ்.பி., சீனிவாஸ் விசாரிக்கிறார்.

'கேங்வார்'



நேற்று மதியம் மருத்துவமனைக்கு சென்ற சீனிவாஸ், ரிக்கி ராயிடம் விசாரித்தார். தன்னை கொல்ல முயன்றது யார் என்று தெரியவில்லை. சித்தி அனுராதா உட்பட 4 பேர் மீது, சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். துப்பாக்கி சூடு பற்றி, போலீசில் புகார் செய்ய ரிக்கி ராய் தரப்பு முதலில் தயக்கம் காட்டியது. போலீசார் நிர்பந்தத்தின்படி புகார் செய்தனர்.

இச்சம்பவத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடப்பதற்கு முன்பு, பண்ணை வீட்டில், 'கேங்வார்' நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் பண்ணை வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில், துப்பாக்கி குண்டு ஏதாவது கிடைக்கிறதா என்று மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் நேற்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் சிக்கவில்லை.

சிம் இல்லா போன்



ரிக்கி ராய் காரை துளைத்த இரண்டு குண்டுகள், பட்டன் மொபைல் போன் நேற்று முன்தினமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொபைல் போனுக்குள் சிம்கார்டு இல்லை. இதுவும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

துப்பாக்கி சூடு வழக்கில், முத்தப்பா ராயின் 2வது மனைவி அனுராதா உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி இருந்தது. அவர்களின் மொபைல் போன் தற்போது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. அனுராதா வெளிநாடு தப்பி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முத்தப்பா ராய் முன்னாள் நிழல் உலக தாதா என்பதால், அவர் மீதான பழைய பகையில் ரிக்கி ராயை கொல்ல முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. நிழல் உலக தாதாக்களுக்கு தொடர்பு உள்ளதா என்று, பெங்களூரு சி.சி.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement