கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஒட்டாவா: கனாவில் குருத்ராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தினர். தற்போது மற்றொரு லட்சுமி நாராயணன் ஹிந்து கோவிலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றொரு லட்சுமி நாராயணன் ஹிந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
கோவில் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து கனடாவில் உள்ள ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
காலிஸ்தானி பயங்கரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹிந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கனடா எம்.பி., சந்திரா ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் இன்றும் குறையாமல் தொடர்கின்றன. இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
பயத்தையும், பிரிவினையையும் பயங்கரவாத சக்திகள் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதிகாரிகளிடமிருந்து உடனடி நடவடிக்கையை கோர வேண்டிய நேரம் இது. மவுனமாக இருப்பதால் இனி ஒரு பயனும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
