பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி

ரஜோரி: ஜம்மு காஷ்மீரை ஆளும் முதல்வர் ஒமர் அப்துல்லா, சட்டப்பிரிவு 370 பற்றி பேசுவதற்கே பயப்படுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, சட்டசபை தேர்தல் மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, ராஜோரி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் முதல்முறையாக கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. நாம் எதிர்பார்க்காத செயல்கள் தான் இந்த 6 மாதங்களில் நடந்துள்ளது. குறிப்பாக, வக்ப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது வருத்தமளிக்கிறது. அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறி விட்டனர்.

ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள பகுதியாகும். இங்கு ஆளும் தேசிய மாநாடு கட்சி, வக்ப் மசோதாவுக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவை பார்லிமென்டில் முன்மொழிந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும், அவரது மகனும், முதல்வருமான ஒமர் அப்துல்லாவும் ஸ்ரீநகருக்கு வரவேற்றது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவகாசம் எடுக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதற்கான ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணைநிலை கவர்னர் ஆட்சி நிர்வாகத்திற்கும், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நிர்வாகத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அவர்கள் சட்டப்பிரிவு 370 பற்றி பேச பயப்படுகிறார்கள். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் விவகாரத்தில் பா.ஜ., கதையை இவர்கள் தொடர்கிறார்கள். தேசிய மாநாட்டுக் கட்சி வேண்டுமென்றே பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தை முடக்கியது. அதுமட்டுமில்லாமல், சட்டப்பிரிவு 370க்காக குரல் கொடுக்கும் பி.ஏ.ஜி.டி., கூட்டணியையும் தேசிய மாநாட்டு கட்சி உடைத்து விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement