நோயாளி ரத்த குரூப்பை மாற்றிய மருத்துவ ஊழியர்களால் அதிர்ச்சி
ராய்ச்சூர்: ராய்ச்சூர் நகரில் வசிப்பவர் ஷாஹிம் பேகம், 35. இவர் தவறி கீழே விழுந்ததில் கையில் அடிபட்டது. சிகிச்சைக்காக ஏப்ரல் 14ம் தேதி, ராய்ச்சூரின் அரசு சார்ந்த ரிம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். எனவே ஷாஹிம் பேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்த வேண்டியிருந்ததால், அவரது ரத்த மாதிரியை மருத்துவ ஊழியர்கள் பரிசோதனைக்காக எடுத்தனர். அறிக்கையை நோயாளியின் குடும்பத்தினரிடம் கொடுத்து, ரத்தம் ஏற்பாடு செய்யும்படி கூறினர்.
அப்போது அறிக்கையை கவனித்த குடும்பத்தினர், ரத்த குரூப்பை மாற்றி குறிப்பிட்டிருந்தது தெரிய வந்தது. ஷாஹிம் பேகத்தின் ரத்த குரூப் வேறு; அறிக்கையில் வேறு குரூப் குறிப்பிட்டிருப்பதை கவனித்தனர். உடனடியாக டாக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
அவரும் மருத்துவமனை லேப் ஊழியர்களிடம் விசாரித்த போது, அவர்களின் குளறுபடி தெரிந்தது.
இதற்கு ஊழியர்களின் அலட்சியமே காரணம். ஒருவருக்கு பொருத்தமான ரத்தத்தை மட்டுமே செலுத்த வேண்டும். வேறு குரூப் செலுத்தினால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஷாஹித் பேகத்தின் குடும்பத்தினர், அறிக்கையை கவனித்ததால், ரத்த குரூப் மாறியிருப்பதை கண்டுபிடித்தனர். இல்லையென்றால் வேறு குரூப் ரத்தம், நோயாளியின் உடலில் சேர்ந்து, அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
நடந்த சம்பவத்தை கண்டித்த குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, வலியுறுத்தி உள்ளனர்.