பனசங்கரி சந்திப்பு நடை மேம்பாலம் பொது மக்களுக்காக மெட்ரோ திட்டம்

பெங்களூரு: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பனசங்கரி சந்திப்பில், 50 முதல் 55 கோடி ரூபாய் செலவில், நடை மேம்பாலம் கட்ட பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின் பனசங்கரி மெட்ரோ நிலையம், கடந்த ஜூன் 2017ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. அதிக மக்கள் நெரிசல் மிகுந்த மெட்ரோ நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். இங்குள்ள பி.எம்.டி.சி., பஸ் நிலையம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ நிலையம் மற்றும் பஸ் நிலையம் இடையே, 700 மீட்டர் துாரம் உள்ளது. இப்பகுதியில் சாலையை கடப்பதே பெரும் கஷ்டம்.

பயணியரின் வசதிக்காகவும், பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டும், நடைபாதை வியாபாரிகளுக்கு இட வசதி செய்து தரும் நோக்கிலும் பனசங்கரி சந்திப்பில் பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், நடை மேம்பாலம் கட்ட, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நடை மேம்பாலம் வட்ட வடிவமாக இருக்கும். அதற்கு தகுந்தார் போன்று, சந்திப்பு மாற்றி அமைக்கப்படும்.

நடை மேம்பாலம் அமைப்பதுடன், செடிகள் நட, டிராபிக் விளக்குகள் பொருத்த தனி இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நகரில் உள்ள மற்ற நடை மேம்பாலங்களை விட, இந்த நடை மேம்பாலம் மாறுபட்டதாக இருக்கும். அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் பொருத்தப்படும். பொது மக்களுக்கு தரையில் நடப்பதை போன்ற அனுபவம் அளிக்கும்.

நடை மேம்பாலம் திட்டத்துக்கு, 50 முதல் 55 கோடி ரூபாய் வரை செலவாகும். பணிகளை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பெறும் நிறுவனம் 15 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதன்பின் அந்நிறுவனமே நடை மேம்பாலத்தை நிர்வகிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement