பூணுாலை கத்திரிகோலால் வெட்டிய அதிகாரிகள் தார்வாட் தேர்வு மையத்தில் நடந்த அடாவடி

தார்வாட்: பொது நுழைவு தேர்வு எழுத சென்ற, தார்வாட் மாணவரின் பூணுாலை தேர்வு மைய அதிகாரிகள், கத்திரிகோலால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் கடந்த 16, 17ம் தேதிகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான பொது நுழைவு தேர்வு நடந்தது. பீதரில் சாய் ஸ்பூர்த்தி என்ற கல்லுாரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்கு, சுசிவ்ரித் குல்கர்னி என்ற மாணவர் தேர்வு எழுத சென்றார். அவர் அணிந்திருந்த பூணுாலை தேர்வு மைய அதிகாரிகள் அகற்றுமாறு கூறியதால், தேர்வு எழுதாமல் வந்து விட்டார்.
இதுபோல, ஷிவமொக்காவில் அபிஜ்னா என்ற மாணவர், கையில் கட்டி இருந்த காசி கயிறையும் அதிகாரிகள் அகற்றி இருந்தனர். இந்த இரு சம்பவங்களும், பிராமண சமூகத்தினரை கோபம் அடைய செய்து உள்ளது. அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
இந்நிலையில், தார்வாடில் தேர்வு எழுத சென்ற மாணவர் அணிந்திருந்த பூணுாலை தேர்வு மைய அதிகாரிகள் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இந்த தகவல் நேற்று தான் வெளியானது.
தார்வாட் ராகவேந்திரா நகரை சேர்ந்த நந்தன் என்ற மாணவர், கடந்த 16 ம் தேதி தார்வாட் வித்யாகிரி பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ்., கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். அவர் பூணுால் அணிந்திருந்ததை பார்த்த அதிகாரிகள், அதை அகற்றுமாறு கூறினர். ஆனால், நந்தன் மறுத்து உள்ளார். தேர்வுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தன், பூணுாலை கழற்றி பத்திரமாக வைத்துவிட்டு வருவதாக கூறி இருக்கிறார். தேர்வுக்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறிய அதிகாரிகள், கத்திரிகோலை எடுத்து வந்து பூணுாலை வெட்டி உள்ளனர்.
வெட்டப்பட்ட பூணுாலை நந்தனிடம் கொடுத்து தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. பீதர், ஷிவமொக்காவில் நடந்த சம்பவங்களுக்கு பின், தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது பெற்றோரிடம் நேற்று அவர் கூறி உள்ளார்.
ஆறுதல்
இந்த தகவல் பரவியதால் பிராமண சமூகத்தினர் நேற்று மாலை, தார்வாட் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
இதற்கிடையில் பீதர் மாணவர் சுசிவ்ரித் வீட்டிற்கு, வனத்துறை அமைச்சரும், பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஈஸ்வர் கன்ட்ரே, நகராட்சி நிர்வாக அமைச்சர் ரஹீம்கான் நேற்று சென்றனர். சுசிவ்ரித், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தான் நடத்தி வரும் கல்லுாரியில், இன்ஜினியரிங் இலவசமாக படிக்க சீட் தருவதாக, சுசிவ்ரித் பெற்றோரிடம், ஈஸ்வர் கன்ட்ரே கூறினார். சுசிவ்ரித் விவகாரத்தில் தவறு செய்த கல்லுாரி முதல்வர் சந்திரசேகர், ஊழியர் சதீஷ் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர் என்ற தகவலையும் கூறினார்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு