யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை பூணுால் விவகாரத்தில் சிவகுமார் உறுதி

மங்களூரு: ''பூணுால் விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா பெல்தங்கடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள ஒக்கலிகர் சேவா சங்கத்தின் கட்டடத்தை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று திறந்து வைத்தார். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது:

மதத்தை பொருட்படுத்தாமல் கொள்கை ஒன்று தான். நுாறு பெயர்கள் இருந்தாலும் கடவுளும், வழிபாடும், பக்தியும் ஒன்று தான். கடவுள் பல பெயர்களை கொண்டவர். நாம் பிறக்கும்போது இந்த ஜாதி, மதத்தில் தான் பிறக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. பிறப்பும், இறப்பும் தான் ஜாதி, மதத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.

மத நடைமுறையில் எங்கள் அரசு தலையிடாது. அந்தந்த மதங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். அனைவரையும் ஒன்றிணைக்க அரசு பாடுபடும். மாணவர்களிடம் பூணுால் அகற்ற கூறிய விவகாரத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பலர் அரசியல் செய்கின்றனர். அவர்கள் அப்படியே செய்யட்டும். விமர்சனம் இறந்து விடும்.

வேலை நிலைத்து இருக்கும். ஒக்கலிகர் சேவா சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். இந்த சங்கம் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குகிறது. கல்வி இருந்தால் பணிவு; பணிவு இருந்தால் தகுதி கிடைக்கும். நமது கலாசாரம் நமது நாட்டின் சொத்து. அனைவரும் அதை பாதுகாக்க வேண்டும்.

மடங்களை பாதுகாத்தால் தான் தர்மத்தை காக்க முடியும். மடங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த தொண்டுகளை செய்ய வேண்டும். எல்லாரும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement