பகலில் ஆசிரியை... மாலையில் மாணவி!

பகலில் ஆசிரியர்களாகவும், மாலையில் மாணவியராகவும் இருந்த இரண்டு பெண்கள், துளு மற்றும் கொங்கனி எம்.ஏ.,வில் முதல் இடத்தை பெற்று அசத்தியுள்ளனர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், சூலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிப்பிரியா, 48. இவர் கன்னடத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றவர். முதல் ரேங்க் பெற்றிருந்தார். தற்போது இவர் மங்களூரின் கார் ஸ்ட்ரீட்டில் உள்ள, தயானந்தா பை அரசு கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். காலையில் விரிவுரையாளராக இருக்கும் இவர், மாலையில் மாணவியாக மாறுகிறார்.

முதல் ரேங்க்



மங்களூரின் ஹம்பனகட்டேவில் உள்ள மங்களூரு பல்கலைக் கழகத்தின் மாலை கல்லுாரியில் சேர்ந்து, தன் தாய் மொழியான துளுவில் எம்.ஏ., படித்தார். இங்கும் அவர் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

மங்களூரின் மன்னகுட்டேவில் வசிப்பவர் அனிதா ஷெனாய், 50. இவரது கணவர் ஹரிஷ் ஷெனாய், பொறியாளராக பணியாற்றுகிறார். மங்களூரு நகரின், கோடியால் பைலுவில் உள்ள சாரதா வித்யாலயாவில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

தன் தாய் மொழியான கொங்கணியில், எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். இவரும் மாலை கல்லுாரியில் சேர்ந்து படித்து, தேர்வு எழுதியுள்ளார். முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இருவரும் பட்டம் பெற்றனர்.

படிப்புக்கு வயது, குடும்பம், பணம் உட்பட எதுவுமே தடையாக இருக்காது. எந்த வயதிலும் படிக்கலாம். பட்டம் பெறலாம் என்பதை, இருவரும் சாதித்து காண்பித்து உள்ளனர். பகல் நேரத்தில் ஆசிரியை பணி செய்தார். மாலையில் கல்லுாரியில் எம்.ஏ., மாணவியாக படித்தார். இது மற்ற பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

ஒத்துழைப்பு



அனிதா ஷெனாய் கூறியதாவது:

நான் சாரதா வித்யாலயாவில், டீச்சராக பணியாற்றுகிறேன். மாலை கல்லுாரியில் சேர்ந்து, கொங்கணி மொழியில் எம்.ஏ., படிக்க சேர்ந்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. என் குடும்பம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிப்பிரியா கூறியதாவது:

நான் கல்லுாரியில், மாணவர்களுக்கு கன்னட மொழியில் பாடம் நடத்துகிறேன். இங்குள்ள மொழி துளு. இந்த மொழியில் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதாலும், பாட புத்தகத்தில் துளு கலாசாரம் குறித்து விவரிக்கப்பட்டதால், இது பற்றி அதிக ஆழமாக தெரிந்து கொள்ள விரும்பினேன்.

துளு மொழியை ஆய்வு செய்த போது, கலாசாரத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் ஆசிரியையாக பணியாற்றுவதால், மாலை கல்லுாரியில் கற்றேன். எந்த வயதிலும் பெண்கள் உயர் கல்வி பெறலாம்.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

Advertisement