கோடை தீவிரமடைவதற்கு முன்னரே குடிநீர் தட்டுப்பாடு: பல மாவட்டங்களில் பொதுமக்கள் தவிப்பு

சென்னை : கோடை தீவிரம் அடைவதற்கு முன்னரே, பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை துாக்கியுள்ளதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மாநிலம் முழுதும் 90 அணைகள், 14,110 ஏரிகள், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இவற்றின் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில், பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
வறண்டு விட்டன
அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவான, 224 டி.எம்.சி.,யில், 128 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது. இதில், 20 அணைகள் வறண்டு கிடக்கின்றன. பெரும்பாலான அணைகளில், 40 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பே உள்ளது. ஏரிகளை பொறுத்தவரை, 1,166 ஏரிகள் முழுமையான வறண்டு விட்டன. மேலும், 3,434 ஏரிகள் வறண்டு விடும் நிலையில் உள்ளன. இது தவிர, 3,853 ஏரிகளில், 50 சதவீதத்திற்கு குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.
தமிழக குடிநீர் வாரியம் வாயிலாக, நகரம் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
கோடை வெயில் தீவிரம் அடைவதற்கு முன்பாகவே, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கி உள்ளது.
மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனர். சட்டசபையிலும் இப்பிரச்னை எதிரொலித்து வருகிறது. பல எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில், 10 நாட்களுக்கு ஒரு முறை, வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது என, புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதிய கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடப்பதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு விளக்கம் அளித்து சமாளித்து வருகிறார்.
நடவடிக்கை
கோடை காலத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து, தலைமைச் செயலர் தலைமையில், ஏப்ரல் மாதம், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
தற்போது சட்டசபை கூட்டம் நடப்பதால், அந்த கூட்டம் குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, சிறப்பு நிதி ஒதுக்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் வீதிக்கு வருவதற்கு முன், உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு