பூட்டிய வீட்டில் திருடிய பெண்ணிடம் விசாரணை

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு ரோடு இந்திரா வீதியை சேர்ந்தவர் நட்ராஜ், 50; கூலி தொழிலாளி. மனைவி, மகள், தாயுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு, சாவியை பிரஸ் வைக்கும் ஸ்டாண்டில் வைத்து சென்றார். அவர் மனைவி மேல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டில் தாய் இருந்தார். சிறிது நேரம் கழித்து தாய் வெளியே வந்தபோது அவரது வீட்டை அடையாளம் தெரியாத, முகத்தில் மாஸ்க் அணிந்த ஒரு பெண் பூட்டியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் வெயிட்டிங்கில் இருந்த ஆட்டோவில் பெண் ஏறி சென்றுள்ளார். சந்தேகப்பட்ட அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 11.5 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.


சூரம்பட்டி போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். திருட்டில் ஈடுபட்ட, 35 வயது மதிக்கதக்க பெண், ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலில் கரூர் சென்றது உறுதியானது. கரூர் சென்ற சூரம்பட்டி போலீசார் பெண்ணை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள், குறிப்பாக பூட்டிய வீடுகளில் திருடுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement