காத்து கிடக்கிறோம்... காத்து தான் கிடைக்குது... தவிப்பில் காரியேந்தல்பட்டி மக்கள்

கொட்டாம்பட்டி: காரியேந்தல்பட்டியில் போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவதால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மனப்பச்சேரி ஊராட்சி காரியேந்தல்பட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் போர்வெல் நீரும், உப்பு தண்ணீரும், ஒரு தெருக்குழாயில் குடிநீருக்காக காவிரி தண்ணீர் இணைப்பு கொடுத்திருந்தனர்.
தற்போது காவிரி தண்ணீர் வராததால் மக்கள் குழாய் அருகே காத்து கிடக்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி ரூ.16.75 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக காணப்படுகிறது.
மக்கள் கூறியதாவது: காவிரி தண்ணீருக்காக 3 கி.மீ., தொலைவில் உள்ள விலக்கு ரோடு மற்றும் 5 கி.மீ., தொலைவில் உள்ள மனப்பச்சேரிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.
தெரு குழாயில் குடிநீருக்காக பல மணிநேரம் காத்து கிடப்பதால் காற்று தான் வருகிறது. தண்ணீர் வரவில்லை.
மேலும் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
இத்தண்ணீரை பருகுவதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால் மேல்நிலைத் தொட்டியில் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றனர்.