அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி

அரூர்: அரூர் கடைவீதியில், நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் கடைவீதியில், ஜவுளிக்கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், எலக்ட்ரானிக்ஸ், மளிகை மற்றும் நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அதிகளவில் உள்ளன. இதனால், கடைவீதி சாலையில் எப்போதும், மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், கடைவீதி வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்களால், கடைவீதி பகுதியில் நாள்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பலமுறை நடத்தப்பட்டும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. மேலும், போக்குவரத்து போலீசார் இருந்தும், நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், அவர்கள் ஈடுபடாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், போக்குவரத்து போலீசார் ஈடுபடுவதுடன், அரூர் கடைவீதி வழியாக, பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்ல, தடை விதிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement