இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!

4


பல்லடம்: ஐகோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.


ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி, சாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.


இதுதொடர்பாக, கடந்த மார்ச் 27ல் அனைத்து கட்சியினரையும் அழைத்து, கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும், அகற்றப்படவேண்டிய பட்டியலில், தரையில் நடப்பட்ட 2,652 கம்பங்கள்; பீடத்துடன் கூடியவை 645 என, மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் உள்ளன.
இவற்றை, இன்றைக்குள் (ஏப்., 21) அகற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, தி.மு.க., கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, அக்ரகட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.


இருப்பினும், தி.மு.க.,வினரே பெரும்பாலான இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றாமல் வைத்துள்ளனர். இதேபோல், அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்கங்கள் மற்றும் சாதி, மத அமைப்பு சார்ந்த கொடிக்கம்பங்களும் அகற்றப்படாமல் உள்ளன.


மின் கம்பிகளுக்கு அருகாமையில் உள்ள கம்பங்களை தன்னிச்சையாக அகற்றமுடியாது. மின் இணைப்பைத் துண்டித்து கம்பங்களை அகற்ற தேவையான உதவிகளை உடனடியாக செய்துதர மின்வாரியம் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தயாராக இருந்தும், கட்சியினர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


கோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் கொடிகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

Advertisement