கால்நடை மருந்தகங்களில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டுகோள்
அரூர்: கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, கடும் வெயில் காணப்படுகிறது.
இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளால், கால்நடை வளர்ப்போர் சிரமப்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி, வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், அரூர் பகுதியில், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், ஒரு கட்டு வைக்கோலை, 180 முதல், 200 ரூபாய் வரை, விற்பனை செய்து வருகின்றனர்.
உலர் தீவன தட்டுப்பாட்டை போக்க கடந்த, 2017ல் அரசு சார்பில் மாவட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தில், மொரப்பூர், அரூர், மோளையானுார், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 12 இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில், விற்பனை கிடங்கு அமைக்கப்பட்டு, கால்நடை பராமரிப்பு துறை மூலம், மானிய விலையில் உலர் தீவனமாக வைக்கோல் வழங்கப்பட்டது.
வறட்சி நிலை சீராகும் வரை, ஒரு கால்நடைக்கு, நாள் ஒன்றுக்கு, 3 கிலோ வீதம், அதிகபட்சம், ஐந்து கால்நடைகளுக்கு வாரத்திற்கு, 150 கிலோ வரை, கால்நடை வளர்ப்போர் ஒருவருக்கு மானிய விலையில், கிலோ, 2 ரூபாய்க்கு உலர் தீவனம் வழங்கப்பட்டது. எனவே, நடப்பாண்டு, கடும் வெப்பம் மற்றும் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க, கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி