ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களில் பிரார்த்தனை

நாமக்கல்: ஈஸ்டர் திருநாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும், 40 நாட்களை, தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில், உலகம் முழுவதும், 'ஈஸ்டர்' திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

மோகனுார் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசீலி ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement