பர்கூர், கந்திகுப்பம் போலீஸ் எல்லைகளில் 110 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், எஸ்.பி., தங்கதுரை தலைமை வகித்து பேசியதாவது: பர்கூர், கந்திகுப்பம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, பாண்டிச்சேரி, சென்னை, ஆந்திரா செல்லும் மாநில எல்லைகளும், திருப்பத்துார் மாவட்ட எல்லையும் அமைந்துள்ளன. இதனால், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

டூவீலரில் விலை உயர்ந்த பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளை வாடகைக்கு விடும்போது, முழு விபரங்களை பெற வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், உடனே போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும். டூவீலரில், பெண்கள் தனியாகவோ, குழந்தைகளுடனும் செல்லும்போது ஹெல்மெட் அணிந்தும், கழுத்தில் உள்ள நகைகளை துணியால் மறைத்து செல்ல வேண்டும். கிராமங்களில் சந்தேகத்திற்குகிடமாக சுற்றித்திரிபவர்கள் பற்றி உடனே போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் அழைப்புகளை இன்சூரன்ஸ் கம்பெனி, வருமானவரித்துறை, வங்கியில் இருந்தோ அல்லது கல்லுாரியில் இருந்தோ பேசுவதாக கூறி ஓ.டி.பி., எண்களை கேட்டாலோ அல்லது அவர்கள் அனுப்பும் லிங்கை பயன்படுத்த சொன்னாலும் அவ்வாறு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement