செய்திகள் சில வரிகளில்...

பள்ளி ஆசிரியை மாயம்



தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா 24. இவரது கணவர் விக்னேஷ். இவர்களுக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளார். பவித்ரா, தர்மபுரியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கடந்த, 13 அன்று மாயமானார். இது குறித்து, அவரது தாய் இந்திரா புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்பெண்ணையாற்றில் மூழ்கி வாலிபர் சாவு



மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார், 22. இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் தொட்டம்பட்டி தென்பெண்ணையாற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். புகார் படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்ற 2 பேர் கைது



தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சின்னசாமி நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, குண்டலப்பட்டியில் மது விற்ற சென்னப்பன், 40, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., விஜயசங்கர் ரோந்து சென்றபோது, செங்கோடிபுரத்தில் மதுவிற்ற கல்யாணி, 60, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

போச்சம்பள்ளியில் ஆடு, மாடுகள் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை



போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த, 2 வாரங்களாக அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று, 700க்கும் மேற்பட்ட ஆடுகள், 300க்கும் மேற்பட்ட ஜர்சி மற்றும் நாட்டு கறவை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை விவசாயிகள் வாங்கிச் சென்றனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் விற்பனையாகின.

தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி



அரூர்: தீ தொண்டு வாரத்தையொட்டி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், தர்மபுரி மாவட்டம், அரூரில், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமை வகித்தார். அரூர் தாலுகா அலுவலகம் அருகில் துவங்கிய பேரணியை, தாசில்தார் பெருமாள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், நான்குரோடு, சேலம் பைபாஸ் சாலை, சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி நிலைய அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தீயணைப்பு வீரர்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Advertisement