தமிழகத்தின் பவித்ரா 'தங்கம்': தேசிய 'போல் வால்ட்' போட்டியில்

கொச்சி: தேசிய பெடரேஷன் சீனியர் தடகளத்தின் 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா தங்கம் வென்றார்.

கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா, அதிகபட்சமாக 4.00 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.


மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா (4.00 மீ.,) வெள்ளி வென்றார். ஹரியானாவின் வன்ஷிகா (3.90 மீ.,) வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அபினயா 'வெள்ளி': பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 11.54 வினாடியில் கடந்த தமிழகத்தின் அபினயா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தெலுங்கானாவின் நித்யா (11.50 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். கர்நாடகாவின் ஸ்னேகா (11.62 வினாடி) வெண்கலம் வென்றார்.


ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் ரயில்வே அணியின் பிரனவ் பிரமோத் (10.27 வினாடி), ஒடிசாவின் அனிமேஷ் குஜுர் (10.32), கர்நாடகாவின் மணிகண்ட ஹோப்லிதர் (10.35) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போலீஸ் அணியின் சச்சின் யாதவ் (83.86 மீ.,) தங்கம் வென்றார். ரயில்வே அணியின் யாஷ்விர் சிங் (80.85 மீ.,), ரிலையன்ஸ் அணியின் சாஹில் சில்வால் (77.84 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

Advertisement