தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்; ராகுலுக்கு தமிழக காங்., துணை தலைவர் கடிதம்


'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு, தமிழக காங்., துணைத் தலைவர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:



தி.மு.க., கூட்டணியில், 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை தேர்தல் நேரத்தில் எழுப்பவும், குறைந்த பட்சம் 25 தொகுதிகள் கேட்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டுள்ளது. 'காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்,

துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும்' என்ற கோஷங்கள் காங்கிரசிலும் எழுந்துள்ளன.

மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாளை ஒட்டி, ஆட்சியில் பங்கு கேட்டு போஸ்டர் ஒட்டிய நிர்வாகிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி வேண்டும்; தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் கேட்க வேண்டும்' என சோனியா மற்றும் ராகுலுக்கு, தமிழக காங்., மூத்த துணைத் தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'கடந்த 2006ல் நடந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அப்போது, தமிழக காங்கிரசுக்கு ஆறு அமைச்சர்களை தர கருணாநிதி முன் வந்தார். அன்றைய மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, மறைந்த சுதர்சனம், மற்றொரு மூத்த எம்.எல்.ஏ., ஆகியோர் அதை தடுத்துவிட்டனர்.

எனினும், வாரியத் தலைவர், அரசு வழக்கறிஞர் என, பல்வேறு அரசு பதவிகளை காங்கிரசாருக்கு கருணாநிதி வழங்கினார். ஆனால், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், பீட்டர் அல்போன்சுக்கு மட்டுமே சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பதவிக்காலம் முடிந்ததும், அதையும் நீட்டிக்கவில்லை.

வாரியத் தலைவர் பதவி, நல வாரிய உறுப்பினர் பதவி போன்றவற்றில் காங்கிரசாருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது; ஆனாலும், அது கானல் நீராகவே உள்ளது. கோரிக்கை மனுக்களோடு செல்லும் காங்கிரசாரை, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் மதிப்பதில்லை.

தி.மு.க., பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்கிறது. அதில் மாற்றம் வர வேண்டும். காங்கிரசாருக்கு அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, டில்லி மேலிடம் முன்வர வேண்டும். அப்போதுதான், தமிழகத்தில் காங்., தனித்து வளர்வதோடு, காங்கிரசாருக்கு மரியாதையும் முக்கியத்துவமும் இருக்கும்.

இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.



- நமது நிருபர் -

Advertisement