தி.மு.க., அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேட்டி

சென்னை : ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்,'' என, பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.

சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:

தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்தால், எந்தெந்த துறைகள் மேம்படுமோ, அது நடக்கவில்லை என்பதை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, திறனும், பணமும் உள்ள அமைச்சரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் தியாகராஜன். இதிலிருந்து, அவருக்கு ஏதோ மன வருத்தம் இருப்பது தெரிகிறது.

அதனால் தான் உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, 'நேர்மறையாக பதில் சொல்லுங்கள்' என்கிறார்.

நிதியமைச்சராக இருந்த தியாகராஜன், 30,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு தண்டனையாகவே, அவரது துறை மாற்றப்பட்டதாக தமிழக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

தியாகராஜனுக்கு பெயரளவுக்கு ஒரு துறையை கொடுத்து விட்டு, அதற்கான நிதி, அதிகாரத்தை கொடுக்கவில்லை. இதன் வாயிலாக அவருக்கு மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து கருத்து சொல்வோரை, தி.மு.க., அரசு கைது செய்கிறது. அரசுக்கு உள்ளேயே கருத்து சொல்பவரின் துறையை மாற்றி, தண்டனை வழங்குகிறது. அதனால் தான் அமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க., அரசின் நாட்களை நிறைவு செய்ய செய்ய, ஒவ்வொரு அமைச்சரும் அவர்கள் பாணியில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அரசின் மீது, மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கே அதிருப்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement