யாரிடம் நிதி, அதிகாரம் உள்ளதோ அந்த அமைச்சர் செய்து கொடுப்பார் அமைச்சர் தியாகராஜன் விரக்தி
சென்னை: ''தகவல் தொழில்நுட்ப துறைக்கு, நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல், அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், எங்கள் துறையில் செயல்படவில்லை,'' என அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்., - கணேஷ்: ஊட்டியில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில், ஊட்டியில் இருந்து 87 கி.மீ., தொலைவில், 61.59 ஏக்கர் நிலத்தில், 217.46 கோடி ரூபாயில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, 2008 முதல் செயல்பட்டு வருகிறது.
கூடுதலாக, 2.66 லட்சம் சதுர அடியில், 114.16 கோடி ரூபாய் செலவில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. எனவே, ஊட்டியில் புதிய பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை.
கணேஷ்: கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஊட்டியில் இருந்து கோவைக்கு, 80 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது. படித்த இளைஞர்களுக்காக பரிசீலனை செய்ய வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: கடந்த நவம்பரில் புதிய கட்டடம் திறக்கப்படும்போது, தற்போதுள்ள 'டைடல் பார்க்' அருகே, 17.7 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை முடித்த பின், அடுத்த திட்டம் பரிசீலிக்கப்படும்.
கணேஷ்: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 'இ - சேவை' மையம் கட்டப்படுகிறது. எப்போது உபயோகத்திற்கு கொண்டு வருவீர்கள்?
அமைச்சர் தியாகராஜன்: ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், ஒரு கணினி வழங்கப்பட்டது; இ - சேவை உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டி முடித்து விட்டால், எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம்.
அ.தி.மு.க., - பொன் ஜெயசீலன்: கூடலுார் தொகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் நிறுவனங்கள் இல்லை; மைசூரு, பெங்களூரு செல்ல வேண்டி உள்ளது. எங்கள் ஊரில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் தியாகராஜன்: ஏற்கனவே துறையில் உள்ள சிக்கலை கூறி உள்ளேன். நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல், அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை.
எங்கள் பங்கு சிறியது. 'டைடல், நியோடைடல்' போன்றவை தொழில் துறையில் செயல்படுகின்றன. எனவே, யாரிடம் நிதி, திறன், அதிகாரம் உள்ளதோ, அவர் செய்து கொடுப்பார் என கருதுகிறேன்; எங்களிடம் இல்லை.
சபாநாயகர்: இது உங்களுக்குள் பேசி, முதல்வரிடம் தெரிவித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். சாதகமாக பதில் கூறினால், உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு