'நிதிநிலை சீரானால் அனைத்து மாவட்டத்திலும் சட்டக்கல்லுாரி'

சென்னை:சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

பா.ஜ., - காந்தி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம்; படித்தவர்கள் அதிகம். தொழிற்சாலைகள் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும், 21,000 மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்கள் சட்டம் பயில, சட்டக்கல்லுாரி வேண்டும். தனியார் கல்லுாரியில் கட்டணம் அதிகம்.

அமைச்சர் ரகுபதி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சட்டம் பயின்று, நீதிபதிகளாக அதிகம் பேர் இருக்கின்றனர். இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எங்கும் சென்று, எப்படியும் படித்து முன்னேறி விடுவர். அந்த அளவுக்கு திறமையானவர்கள்.

உங்களுக்கு பக்கத்தில் திருநெல்வேலியில், அரசு சட்டக்கல்லுாரி உள்ளது. கன்னியாகுமரியில் தனியார் சட்டக் கல்லுாரி உள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லுாரி வேண்டும் என்பதே அரசின் கொள்கை. ஆனால், அதிக நிதி தேவைப்படுவதால், அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். நிதி நிலைமை சரியானதும், அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லுாரி துவக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement