தர்பூசணியில் ரசாயன கலப்பு இல்லை மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம்
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தோட்டக்
கலைத்துறை துணை இயக்குனர் குரு சரஸ்வதி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தர்பூசணி பழ பயிர், 1,225 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகம் பயிரிடுகின்றனர். கோடை காலமான மார்ச் - மே மாதங்களில் அறுவடைக்கு வரும். அனைவரும் விரும்பி இப்பழத்தை உண்ணுகின்றனர். சில நாட்களுக்கு முன் தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்வதாக வதந்தி பரவியது.
இதுபற்றி வேளாண் உற்பத்தி ஆணையர், தோட்டக்கலை இயக்குனர் என உயர் அதிகாரிகள் மாவட்ட அளவில் தோட்டக்கலை அதிகாரிகளுடன் கள ஆய்வு செய்து, உண்மை நிலையை தெரிவிக்க உத்தரவிட்டனர். இதில் சுவை, நிறத்துக்காக ரசாயனம் கலக்கவில்லை என உறுதி செய்துள்ளனர்.
அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி, கோடை காலத்தில் உடல் சூட்டை தணித்து, நீர்ச்சத்தையும் அதிகரிக்கும். இரும்பு சத்து, விட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் உண்ணலாம். குறைந்த அளவே சுக்ரோஸ் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளலாம். ரசாயனம் கலப்பு என்ற வதந்தியை மக்கள் நம்ப
வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.