பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாடியில், துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு, தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி, பயணம் செய்வோர் விபரங்களை சேகரித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

ஊத்துக்கோட்டை



ஊத்துக்கோட்டையில், திருப்பதி செல்லும் சாலை, சத்தியவேடு செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களில் ஆந்திர எல்லை உள்ளது. இதில், திருப்பதி செல்லும் சாலையில், மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.ஐ., ஒருவர் தலைமையில் ஒரு போலீஸ், ஒரு ஊர்க்காவல் படை வீரர் மற்றும் நான்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் நான்கு பேர் என, மொத்தம் ஏழு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சத்தியவேடு சாலையில் எவ்வித பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தணி

திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில், பஹல்காம் தாக்குதலை ஒட்டி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்களை, ஹிந்து முன்னணியினர் வைத்திருந்தனர். உரிய அனுமதியின்றி நீதிமன்ற வளாகம் முன் வைக்கப்பட்ட பேனரை போலீசார் அப்புறப்படுத்தினர்.


- நமது நிருபர் -

Advertisement