தூய்மை பணியாளருக்கான உபகரணங்கள் வருகை

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை பணியாளர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில், 3,731 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குப்பையை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து, உரமாக மாற்றும் பணியை செய்கின்றனர். இதன் வாயிலாக, கிராமம் தூய்மையடைவது உறுதி செய்யப்படுகிறது.

இதற்காக, அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மாதம் ஒருமுறை இவர்களுக்கு கையுறை, தலைகவசம், முககவசம், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட ஒன்பது பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான தொகுப்பு, நேற்று சம்பந்தப்பட்ட பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தன.

இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில், 'தூய்மை பணியாளருக்கான தொகுப்பு, மொத்தமாக பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட ஊராட்சி பணியாளரை வரவழைத்து, அவர்களிடம் தொகுப்பு வழங்கப்பட்டு, தூய்மை பணியாளருக்கு வினியோகிக்கப்படும்' என்றார்.


ஒன்றியங்கள் தொகுப்பு எண்ணிக்கை




திருவள்ளூர் --- 317


கடம்பத்தூர் --257


பூந்தமல்லி -- 521


திருவாலங்காடு --- 190


திருத்தணி --- 134


பள்ளிப்பட்டு -- 159


ஆர்.கே.பேட்டை ---207


சோழவரம் --- 343


புழல் --- 67


கும்மிடிப்பூண்டி ---367


மீஞ்சூர் --- 305


வில்லிவாக்கம் --- 390


எல்லாபுரம் ---274


பூண்டி ----200


மொத்தம் 3,731

Advertisement